Pages

Saturday 17 September 2011

பெண்...

There will never be a generation of great men until there has been a generation of free women -- of free mothers - Robert G. Ingersoll
பெண்கள் குறித்து பல பழமொழிகளும், சொற்றொடர்களும் இருந்தாலும், இந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


ஆண்-பெண் சமத்துவம் என்பது வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்பது என் கருத்து. பெண்களுக்கு 30 சதவீதம்..40, 50 என்று அறைகூவும் மனிதர்களும் தன் சொந்த வீட்டில் வசதியாக மறப்பது எப்படியென்று தான் தெரியவில்லை.

என் தோழிகள் பலரும் வீட்டில் ஒரு முகமும் வெளியில் ஒரு முகமும் கொண்டு அவதிப் படுவது கொடுமை. பட்டாம்பூச்சியாக சுற்றிவரும் பெண்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் கூட்டுப்புழுவாய் மாறும் அதிசயம்!..சிலருக்கு திருமணத்திற்குப் பிறகு நல்ல சுதந்திரமோ, இன்னும் மோசமான நிலைக்கோ தள்ளப் படுகின்றனர்.

பெண்கள் படித்தால் முன்னேறி விடுவர் என்பதில் உண்மை உண்டெனினும், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் பார்க்கும் பெரும்பாலோர் வாழும் இந்தியா போன்ற நாடுகளில் குடும்பம் என்ற அடிமைத்தளையில் இருந்து வெளிவந்து கல்வி அறிவைப் பெறவும் பல தடைகள் உள்ளன. அப்படியே தடைதாண்டி வந்தாலும், சுயசிந்தனையை வளர்க்கும் அளவுக்கு நமது கல்வித்தரமும் இருக்கவில்லை. 

இப்போது ஆங்காங்கே சாதனைப் பெண்களைப் பார்த்தாலும், அவர்களும், ஏதாவது ஒரு இடத்திலேனும் பெண் என்பதற்காக பரிகாசத்தையோ, ஏளனத்தையோ கடந்து வர நேர்கிறது.

அனுபவ ரீதியாகக் கூட சொல்ல இயலும். அலுவல் காரணமாக கிராமங்களில் மக்களை சந்திக்கும் போது, ஆண்களே முன்னின்று அதிகாரத் தொனியில் ஆளுவது கண்கூடு. (அதுவும், ஆண் அலுவலர்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம், பெண் அலுவலர்க்கு உடனடியாக கிடைப்பதில்லை). குறிப்பிட்ட தொகுதியில், உள்ளூர் மன்ற உறுப்பினர் (councillor) பெண்ணாக இருக்கவேண்டிய கட்டாயத்தால் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பெண் உறுப்பினரை சமையல் அறையில்தான் பார்க்க முடியும், திருவாளர். கவுன்சிலர் தான் அதிகாரப் பொறுப்பு. கோப்புகளில் கையெழுத்துப் போடுவதும் அவரே. (!!)

பொதுவாக,  விவசாயம், கடல்சார் தொழில்கள், அவை சார்ந்த உபதொழில்களிலும் பெண்களின் பங்கீடு அதிகம் என்பது உண்மை. அதுவும் பருவ நிலை தவறும் போதும், அறுவடைக்கும் மறு உற்பத்திக்கும் இடைப்பட்ட காலங்களிலும், (குறிப்பாக உழவுத்தொழிலாளர்) வருமானத்திற்கு பாடுபடுவது பெண்களே.

பராமரிப்பிலும், வேலையிலும் பாரபட்சம், பாலியல் தொந்தரவுகள், ... இவைகளைத் தாண்டி வெற்றிபெற, முதல் ஆதரவு குடும்பத்தில் இருந்து தொடங்கட்டும்... ஆண்-பெண் சமத்துவம் என்ற போராட்டம் ஒழியும்...

குழந்தை வளர்ப்போடு குடும்பநலனுக்காக பாடுபடும் பெண்களை மதித்து, பொறுப்புக்களைப் பகிர்ந்து சக மனிதனாக உணர்ந்தால் நல்ல சமுதாயம் காண்பது உறுதி.

Friday 2 September 2011

அன்பு பிறந்தநாள்!

அன்புக்கு நாளை பிறந்தநாள்... அவனுக்கு மிகவும் பிடித்த குட்டி  செல்லப் பிராணி, குட்டி நாய்க்குட்டி... ஓவியமாக!!

எல்லா நலன்களும் பெற்று நல்ல மனிதனாய் வாழ வாழ்த்துக்கள், முத்தங்களுடன் அம்மாப்பா

Friday 5 August 2011

சுவிஸில் தமிழர்...

அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது, சுவிஸில் வாழும் தமிழ் இளையர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 7 வயது வரை இலங்கையில் வளர்ந்தவர் அவர். எதேச்சையாக அருகில் அமர்ந்த சில நிமிடங்க‌ளில், அறிமுகப் படுத்திக்கொண்டோம். என்னிடம் கைபேசி இருந்தால் தருமாறும், தன்னிடம் மலேசிய நாணயங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு உதவுமாறும் கேட்டார்... நான் மறுத்து, கைப்பேசி சேவையில் இல்லை என்றுக் கூறி, பத்து ரூபாயை நீட்டினேன். நன்றியுடன் வாங்கி சென்றவர், இலவச தொலைபேசியில் பேசியதாகக் கூறிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.இலவச சேவையைப் பாராட்டிக் கொண்டார்...(ஆனால், சிறிது நேரம் கழித்து, நான் சென்ற போது மூன்றில் ஒன்று தான் வேலை செய்தது, அதிலும் நீண்ட வரிசை...ம்ம்ம் காசு கொடுத்துப் பேசி நகர்ந்தேன்..!)

முதன்முறையாக‌, இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் கொள்ள வந்ததாகக் கூறினார். அவர் வாயில இருந்து இந்தியாவைப் பத்தி இம்புட்டுத் தான் பேசினார்... ஒன்னுமில்ல போல சொல்றதுக்கு...
  • நான் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை.. (சினிமாவில் தான் இந்தியாவைத் தெரிந்து வைத்திருந்தாராம், என்ன படம் பார்த்தாரோ?!)
  • சாப்பாடும் அவ்வளவு பிடிக்கவில்லை..
  • ஒரே stress  தான், ஒரு வேளை அலைச்சல் காரணமும் சேர்ந்திருக்கலாம்!!.
  • pizza வுக்காக அலைந்து திரிந்து, கிடைத்ததும் தின்ன‌ச் சகிக்கல. இத்தாலிய cheese  வகையில் செய்தால் தான் நல்லா இருக்கும். (இதையே நம்ம மக்கள் எவ்வளவு ஸ்டைலாக,பந்தாவாக சாப்பிடுறாங்கன்னு பார்த்தாரா? கேக்கல...)
ஈழப் பிரச்சினையைப் பற்றிப் பேசிப் பயனில்லையென்று நினைத்தாரோ என்னவோ, தலைமை சரியில்லை என்றால் அப்படித்தான், ஆர்மிக்காரர்களை அப்படியே வளர்த்து விட்டிருக்கிறார்கள், சாராயமும், பணமும் தாராளமாகக் கொடுத்துப் பெண்களைக் கண்டால் பாயும் விலங்குகளாக...அவர்களை ஒன்றும் சொல்லமுடியாது என்று...

சுவிஸில் த‌மிழ‌ர் நிலை குறித்துக் கூறிய‌து..

த‌மிழ‌ர் வாழ்க்கை ந‌ல்லாவே இருக்கு...சுத‌ந்திர‌மாக‌வும், ச‌ம‌மாக‌வும் ந‌ட‌த்த‌ப் ப‌டுவ‌தாக‌க் கூறினார்...ந‌ல்ல‌ ச‌ம்பாத்திய‌மும் கூட‌..ஆனால், பிழைக்க‌ப் போன‌ இட‌த்தில் ந‌ல்லா ச‌ம்பாரிச்சாலும், புட‌வை க‌ட்டி க‌ழுத்து ம‌றைய‌ ந‌கையைப் போட்டுக் கொண்டுத் திரிந்தால் இட‌ம் கொடுத்த‌வ‌ன், என்ன‌ நினைப்பான் என்று குறைப்ப‌ட்டுக் கொண்டார்.. இங்கே ப‌ர‌வாயில்லை, எளிமையாக‌ ஒரு ந‌கையுட‌ன், பெண்க‌ள் இருக்காங்க‌ன்னு...(அவர், கல்யாண, காதுகுத்து, பூப்பெய்து விழா போஸ்டரைப் பார்க்கலன்னு நினைக்கிறேன், அப்புறம் திருட்டு தொல்லை இல்லைன்னா, நம்ம ஊருல போட்டி போட்டுக்கிட்டு, அள்ளிப் போட்டுட்டு அலைய மாட்டாங்களா?!...)
 இப்போதுள்ள தலைமுறையினருக்கு தமிழ் பேசத் தெரிந்தாலும், படிக்கத் தெரிவதில்லை...மேற்கத்திய கலாச்சாரத்தில் நல்லதைத் தவிர எல்லாத்தையும் பின்பற்றுறாங்க..(இங்க அதவிட மோசம்னு சொல்லல...)

 தமிழன் எங்கு இருந்தாலும் அடிமையாய் இருப்பதை உணர்வதில்லை எளிதில், என்றே நினைக்கிறேன். சுவிஸில், உண்மைத் தமிழனின் நிலை அறிய படியுங்கள், பகிர்ந்துக் கொள்கிறேன், நன்றியுடன்..


Thursday 14 July 2011

Anupam Mishra: The ancient ingenuity of water harvesting | Video on TED.com

Anupam Mishra: The ancient ingenuity of water harvesting | Video on TED.com


அருமையான தகவல். பழமையைக் கொண்டு  புதுமையின் திறமையைக் கேள்வி கேட்கும் உண்மை...

நன்றியுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

Wednesday 29 June 2011

rabbit...art by anbu

Big bunny!

Monday 20 June 2011

எத்தனை வகை சிரிப்புங்கோ!

ஹா..ஹா

எப்படி இருக்கு?!

இது?!

நல்லா இருக்குல!

Monday 13 June 2011

சிலை - art by அன்பு

இது என்னம்மா?


இது சிலை. 

சரி... என்ன காலைக் காணோம்?

 கல்லு இருக்குல்ல.. ம்ம்ம் அது... candle மாதிரி ஒட்டி இருக்கும்
கல்லு மேல ஒட்டி இருக்கும்...

ஓ.. சரி, கையக் காணோம்?

சும்மா சிலை தானே...அதான்!! ok?!

நல்லா  இருக்கும்மா...

Thursday 2 June 2011

இந்தியர்கள் செவ்விந்தியர்களா?

சமீபத்தில் ஓர் ஓவியரின் வீடியோ விளக்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஓர் இந்திய சிறுமி யை வரைவதாகக் கூறி செவ்விந்தியரைப் போன்று  ஓர் இறகுடன் வரைந்து காண்பித்தார்கள். பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் செவ்விந்தியரையே இந்தியராகக் காண்பிக்கிறார்கள்.

செவ்விந்தியரை பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆசை. cowboy படங்களிலும் மற்ற பிற கொலம்பஸ் - அமெரிக்க கண்டுபிடிப்புகளில் ஆதிவாசித் தோற்றங்களிலும் தான் அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். இப்போது வலையில் தேடும் போது பிடிபட்ட சில அருமையான தகவல்கள் படித்துத் தெரிந்து கொள்ள, உங்களுக்கும்...

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=16402 நன்றிகளுடன்.
http://www.luckylookonline.com/2011/05/blog-post_26.html நன்றிகளுடன்

பின்குறிப்பு: Bob Ross என்ற ஓவியர், தனது வித்தியாசமான துரிதமான ஓவியம் வரையும் கலையில் சிறந்தவர். இவரது ஓவியப் படைப்புகள், அமெரிக்கத் தொலைக்காட்சி  தொடராக (the joy of painting )  நூற்றுக்கணக்கான எபிசோடுகளாக  வெளிவந்ததாம்.

Wednesday 1 June 2011

Dinosaur and its eggs-art by அன்பு

டைனோசார் முட்டை போட்டு பத்திரமா பார்த்துகிட்டு இருக்கு!

Tuesday 31 May 2011

Owl -ஆந்தை எப்படி இருக்கு?!


(OWL னு நான் எழுதியதால், அன்பும் அவன் எழுத்தில் பறக்குற owl னு எழுதியிருக்கானாம்!)

animals க்கு ஏன் வால் இருக்கும்மா?



(ஐயோ, வாலை காணாமே!!)



எப்போதும் தூங்க போகும் முன் அவன் கேட்கும் கேள்விகளில் பதில் கூறி எனது தூக்கம் தொலைவதும் உண்டு...

பெரும்பாலும் பூமியைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியே அதிகமாக இருக்கும்...

நாம் பூமிக்குள்ள இருக்கோமா? வெளியிலேயா?

(வெளியில் தாம்மா...)

வெளியில இருந்தா சுத்தும் போது விழ மாட்டோமா? (பூமி சூரியனைச் சுத்தும்னு சொல்லியாச்சுல்ல!)

அப்ப பூமிக்குள்ளே என்ன இருக்கு..?

இப்படியே போகும்....


animals க்கு ஏன் வால் இருக்கும்மா?

எங்க வீட்டு வாலுக்கு, இந்த பெரிய கேள்வி எழுந்தது நேற்று இரவு...

இந்த கேள்விக்கு, நானும், என் அறிவைத் தோண்டி, ஒரு பெரிய விளக்கம் கொடுத்தேன்

வால் இருக்கிறதால தான் மாடு, ஆடு எல்லாம் ஈ, கொசு, பூச்சியெல்லாம் உடம்புல உட்கார்ந்தா விரட்டி விடும், அதுக்கு கை இல்லைல..

நாய்க்குட்டிக்கு, நம்ம பார்த்து பிடிச்சிருந்தா வாலாட்டும், பேச முடியாதுல்ல..

குரங்கு மரத்துல தாவி தாவி ஓடுறதுக்கு...இதுக்கெல்லாம் தான் வால் இருக்குன்னு...

மகனின் பதில்!

சிங்கத்து மேலயுமா பூச்சி பயமில்லாமா உட்காரும்? roar பண்ணி விரட்டிறாதாம்மா? (சிங்கம் மேல் எப்போதும் ஒரு பிரியம் தான், the king of the jungle ன்னு)..


ம்ம்ம்.. எனக்கும் வால் இருந்தா ஜாலியா இருக்கும்மா... பூச்சி வந்தா விரட்டி விடுவேன், பேப்பர் பறக்காம பிடிச்சுக்கிடுவேன்... (அவரு எழுதும் போது என்ன எழுதுவோம்னு கேக்கக் கூடாது, வரையும் போது...)



உங்க வீட்டுக் குட்டிகளுக்கு சொல்ல, நாமும் தெரிந்துக் கொள்ள?

Thursday 7 April 2011

ஓட்டுப் போடாதே! இப்போதாவது யோசி!

ஓட்டுப் போட்டு என்ன சாதித்து விட்டாய், தோழி/நண்பா? பல திருடரில் ஒரு திருடனைத் தேர்ந்தெடுப்பதில் என்ன பெருமை? உனக்காக குறையொன்றும் தெரியவில்லையெனில், அரசியல்வாதியின் எச்சிலைப் பெற நாயாய் உழைக்கும் கலையுலகு (அதான், தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை உலக மகா நடிகர்கள்)கூறும் கட்சி/வேட்பாளரின் இனிய சாதனைகள்/எதிர்க்கட்சியினரின் மீதான விமர்சனங்களைக் கேள் போதும்! நாறுகிறது தமிழ்நாடே! நம் நலனுக்காகவா, இத்தனை கூட்டங்கள், தொண்டை கிழிய முழக்கங்கள், வெயிலில் வாடி ஓட்டுப் பிச்சைகள்... புல்லரிக்கிறது!!

அப்படியும் போதவில்லையா... இதையாவது படியுங்கள்!

நன்றிகள் பல பதிவருக்கு...

Wednesday 6 April 2011

அது என்ன மூலியம்?

கேட்க சகிக்கவில்லை இந்த வார்த்தையை... தமிழை எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம், புதிதாக இந்த ஒரு வார்த்தை, மூலம் என்பதற்கு மூலியம் என்று அனைவரும், குறிப்பாக ஊடகத்தில் தான் அதிகம் பேசிக் கேட்க வேண்டி இருக்கிறது.


எவ்வளவோ பொறுத்துட்டோம்... இதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தானா?

ஹாக்கி பற்றிக் கொஞ்சம்!



  • ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.

  • தியான் சந்த் (Dhyan Chand), ஆரம்ப கால இந்திய ஹாக்கி அணித் தலைவராக இருந்து, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தான் தேசிய விளையாட்டு தினமாகும்

  • இந்தியாவில் பிரிட்டிஷாரால் 19ம் நூற்றாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டு பிரபலமாகியது.

  • 1928 முதல் இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது

Thursday 31 March 2011

தேவையா?- கிரிக்கெட் அமர்க்களம்!

எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பேச்சு, சாப்பிடும் போதும், தூங்கும் போதும், போகும் போதும், வரும் போதும், பேசும் போதும், எண்ணும் போதும், நடக்கும் போதும், நிற்கும் போதும்.... இன்னும் என்னென்ன பண்ணும் போதும் கிரிக்கெட் தான்... வீட்டில் அடைந்து கொண்டும், அலுவலகத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பியதை உற்றுப் பார்த்துக் கொண்டும், தெருவில் கடைகளில் எட்டிப் பார்த்துக் கொண்டும் எத்தனை சந்தோச முகங்கள்... தி. நகரில் சாவகாசமாக பொருட்கள் வாங்க சரியான வாய்ப்பு!!


தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொள்ளும் ஹாக்கியைப் பற்றி யாருக்காவது தெரியுமா? உலக அரங்கில் சில, பல பதக்கங்களை கொடுத்த விளையாட்டுக்களுக்கு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் உண்டா? அந்த விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் தொடர்ந்து செய்து வருகிறதா, அரசு?


குடியரசு தலைவர், பிரதமர் உட்பட்ட தலைமைப் பட்டாளங்கள், நடிப்புலக நாயகர்கள், இந்தியர்(?) (தமிழக மீனவர்/இந்திய தமிழர்!!) பலரைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரனை அருகில் அமர்த்திக் கொண்டு கைத் தட்டி மகிழ்ச்சியில் திளைத்தக் காட்சி அருமையிலும் அருமை!!


மக்கள் வரிப் பணத்தில் கோடி கோடியாய் பணம் அள்ளிக் கொடுக்கின்றன, அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும். சூதாட்டத்திலும், விளம்பரத்திலும் சம்பாரித்த பணமே, தலைமுறைக்கும் தாங்கும், மட்டைப் பந்து நாயகர்களுக்கு...


இத்தகைய ஆர்வமும், சுறுசுறுப்பும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நல்ல விடயங்களுக்கும் பயன்ப்/ஏற்பட்டால் நல்லது.

Tuesday 22 March 2011

தமிழை வளர்ப்போம்!

சென்ற ஞாயிறு அன்று, தந்தையின் நண்பரைக் காணச் சென்ற பொழுது, ஓர் இனிதான கவி/கருத்தரங்கத்தையும் அனுபவிக்க முடிந்தது. அருமையான தமிழ்க் கவிதைகள்/கருத்துக்கள். முப்பதிற்கும் மேற்பட்டோர் வந்த தமிழ் மன்றக் கூட்டமது. தமிழுக்காக பேசுவது பெரியோரின் வேலை, என்றில்லாமல் ஆறேழு இளைஞரின் பங்கேற்பையும் காண முடிந்தது நல்ல விடயம்.


எங்களது மகனையும் கூட்டிச் சென்றோம்.. இந்த வார்த்தை என்ன? அந்த வார்த்தை என்ன என்று அவன் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் தெரிவித்துக் (பேருந்துக்கு பஸ், வினாவிற்கு கேள்வி/question... நம் நிலைமை இது தான்) கொண்டிருந்தோம். கவிதைக்கு, உனது rhymes, ஆத்திச்சூடி போல என்றதும், புரிந்துக் கொண்டான். நானும், ‘நீ போய் கவிதை சொல்றயா’ என்றதும், ‘கடைசியில் சொல்றேன்’ என்று விளையாட ஓடி விட்டான்.


இரண்டு மணி நேரத்தில் முடிந்த பொழுது, அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி விடை பெற்றுக் கொண்டிருந்தனர், பெரியோர். மகனோ, ‘அம்மா, நானும் போய் சொல்லிட்டு வந்துடுறேன்’ என்று தானாக முன்னே சென்று, சத்தமாக சொல்ல ஆரம்பித்தான். ஆனால், கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லாததால், யாரும் கவனிக்கவில்லை. நான் சென்று, இவனும் கவிதையென, ‘ஆத்திச்சூடி’ சொல்ல இருப்பதைக் கூறியதும், அனைவருக்கும் மகிழ்ச்சி! சிறு மேடையில் (table) தூக்கி நிற்க வைத்ததும், தடங்கலின்றி சொல்லி முடித்தான். தனது பொன்னாடையை (துண்டு) அவனுக்கு வழங்கியும், சிறு பரிசுகளை அளித்தும் மகிழ்ந்தனர், பெரியோர். சிறுவயது முதலே இது போன்ற வாய்ப்புக்களை வழங்குங்கள் என்ற அறிவுரையுடன் விடை பெற்றோம்.


ஆனாலும், தமிழ் பேசினாலே மதிக்காத மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ் வளரும்! இனிய தமிழையும் அறிவோம், மகிழ்வோம்!!

அன்பின் குரலில் ஆத்திச்சூடி!


Friday 18 March 2011

உடல் நலம்

நண்பர்களுக்கு!
இரத்தம் ஏற்றப்பட்டால் மரணமே கதி!!

இந்தப் பதிவைப் படித்துப் பயன் பெறுங்கள்! உண்மை அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது! பதிவருக்கு நன்றிகள் பல

Monday 14 March 2011

ஜப்பான்!

ஜப்பான்-என்னைப் போல் பலருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் இந்நாட்டைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன், முக்கியமாக மக்களின் சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, மரியாதை, தொழில் நுட்ப அறிவு ஆகிய பல காரணங்களுக்காக...


ஜப்பான், ஆறாயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ‘உதிக்கும் சூரிய நாடு’. உலகின் மூத்த குடிமக்களைக் கொண்ட, மிகக் குறைந்த ‘குழந்தை இறப்பு விகிதம்’ உடைய, கொலை பாதககங்கள் (சிங்கப்பூருக்கு அடுத்து) அற்ற நாடாக திகழும் ஜப்பான், இயற்கையின் சீற்றத்தால் அவ்வப்போது நிலைகுலைந்து போவது வழக்கம்.வீடுகளையும் அனைத்துக் கட்டடங்களையும் அதற்கேற்ப சரியான முறையில் வடிவமைத்து தற்காத்து வந்தனர்.



இரண்டாம் உலகப்போரின் போது உலகின் ‘நாட்டாமை’ என்று நினைக்கும் அமெரிக்கா குட்டிப் பையன்(Little boy in Hiroshima), குண்டு மனிதன் (Fat man in Nagasaki) என்ற இரண்டு அணு ஆயுதங்களை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஜப்பானியரைக் கொன்று குவித்தது. அந்த வீழ்ச்சியில் இருந்தும் மீண்டு வாழ்ந்து காட்டினர்.


ஆனால், இந்தமுறை இயற்கை மீண்டும் கொடுமைப் படுத்துகிறது. நினைத்தும் பார்க்க முடியாத இயற்கையின் கொடுர விளையாட்டு. கூடுதலாக அவர்கள் நிர்மாணித்த அணு உலைகளின் விபரீத விளைவுகள்... இவை நிச்சயம் அனைத்து நாடுகளுக்கும் அனுபவ எடுத்துக்காட்டு.


அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்ட நாட்டிற்கே இந்நிலைமை எனில், 20 அணு உலைகள் உள்ள இந்தியா என்ன செய்யப் போகிறது?


போட்டித் தேர்வர்களுக்கு!

இப்போது போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் வேலை தேடும் பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே! அவர்களுக்கு ஒரு சிறு உதவி...

பயனுள்ள வலைத்தளங்கள்!
http://www.jeywin.com/

http://www.onestopias.com/

http://www.saidaiduraisamymanidhaneyam.com/

http://www.radianiasacademy.org/

http://www.indiafirstfoundation.org/

Tuesday 22 February 2011

little art master!

எனது ஓவியங்களும், வண்ணங்களும்...
வண்ணமடித்தது நான் தான், முதல்பரிசும் எனக்குத் தான்... நான் பெற்ற முதல் பரிசும் இது தான்!
பெங்குயின் எப்படி இருக்கு!

Tuesday 25 January 2011

விவசாயப் படிப்பு!

சிறுவயது முதல் படிப்பதில் ஆர்வம் உண்டு. காலையில் செய்தித் தாளுடன் வரும் சிறுவர்மணியைப் படிக்க அண்ணன் அக்காவுடன் போட்டியைத் தொடங்கி, வார, மாத இதழ்களுக்காக அதிகாலையில் (அன்று மட்டும்) எழுந்து காத்திருந்ததில் தொடர்ந்த வாசிப்பு. (முதலில் யார் படிப்பது என்பது தான் போட்டி!). இன்று கண்ணாலும் காண முடியாத பூந்தளிர், அம்புலி மாமா, பாலமித்ரா போன்ற சிறுவர் இதழ்களை நினைத்தாலே அந்த இனிய காலம் வரிசையாய் நினைவில் வந்து போகிறது. ஒருபக்கம் பெருமையாகவும் இப்போதுள்ள குழந்தைகள் படிக்கும் பழக்கமே இல்லாததில் வருத்தமும் உண்டாகிறது. கல்லூரி மாணவரும் தமிழைத் தள்ளாட வைக்கிறார்கள்!

அப்பா இலக்கிய அரசியல் நூல்களையும், அம்மா நடைமுறை நூல்களையும் விடாது படித்ததால், எங்களுக்கும் படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளிப்படிப்பு வரை இனிதே தொடர்ந்தது. பாடப் புத்தககங்களை விட அதிகம் புரட்டியது மற்ற நல்ல புத்தககங்களைத் தான்.

கல்லூரிப் படிப்பு வேளாண் கல்லூரியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புல்லுக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத போதும், அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்து, வீட்டில் அரிசி, பருப்பு,முருங்கை எல்லாம் Oriza sativa, Cajanus cajan, Moringa ஆயிற்று. கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்தது.

பிறகு கற்றுக்கொள்வதில் ஆர்வத்தைத் தடை செய்ய வந்தது, record writing! ஒவ்வொரு semester க்கும் குறைந்தது 10 subjects. ஐந்தாறு பாடங்களுக்காவது record எழுத வேண்டும். ஆரம்பத்தில் சுயமாக எழுதி, பிறகு, கடமைக்கு copy அடிக்க மட்டுமே நேரம் இருந்தது... இதில் ragging, strike, நண்பர்கள், (தோழிகள் மட்டும் தான், அப்படியே சில ஆண் நண்பர்களுடன் பழகினாலும், very restricted, very poor environment).etc., ஆண்களுடன் பழகினாலே தவறு தான், என்பது போன்ற மாயை, நன்றாக பழகினால், எதிர்வாதம் செய்தால், வழிசல் அல்லது, திமிர் பிடித்தவள் பட்டம் தான். some exceptions were also there. பாடங்களை படிக்க மட்டும் வெறுப்பு, அதுவும், notes தேடி படிப்பதில். நூலகம் சென்று பிற புத்தககங்கள், notes தவிர்த்து, பாட சம்பந்தமான நூல்கள் படிப்பதில் மட்டுமே ஓரளவு அறிவு பெற முடிந்தது.

செயல்முறை பாட வகுப்புகளிலும், SCIENTIFIC NAMES ஐ மனப்பாடம் செய்வதில் எப்போதும் தடுமாற்றம் தான். அதிலும், தேர்வு நேரத்தில் minor insects உடைய scientific names ஐ என்னிடம் வந்து கேட்டுப் பயமுறுத்தும் சில தோழிகளும் உண்டு! நான்கு ஆண்டுப் படிப்பில் எந்நேரமும் மற்ற ஆண்டு மாணவருக்கோ, எங்களுக்கோ மிட் செமஸ்டர், செமஸ்டர், செயல்முறைத் தேர்வு என்று நடந்துக் கொண்டே இருப்பதால் தினமும் வகுப்புக்குச் செல்வது போலத் தான் என் போன்றவர்களுக்கு. ஆனால் இரவு முழுதும் தூங்காமல் படித்துக் கொண்டிருக்கும் தோழிகளைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், (எனக்குக்) களைப்பாகவும் இருக்கும்!
இதற்காகவே முதுநிலையில் நேரடி அறிவியல் இல்லாத பாடத்தை (வேளாண் விரிவாக்கம்) எடுத்துப் படித்துத் திருப்தியடைந்தேன். நண்பர்களும் சரியாகவே அமைந்தனர். பாடத்திட்டமும், நமது தனித்துவத்தை உணர ஓரளவு வழிசெய்தது.

ஆனால் விவசாயப் படிப்பு முடித்து விட்டால் அனைத்தும் தெரிந்து நேரடியாக விவசாயத்தில் மூழ்கிவிட முடியாது என்பது என்னுடைய உறுதியான கருத்து (விவசாய குடும்பப் பின்னணி அன்றி).ஆனால் என் போன்ற விவசாய குடும்பத்தைச் சாராதோர், அடிப்படை அறிவு பெற,பல்வேறு துறைகளில் அடிப்படை அறிவுடன் எளிதில் புரிந்துக் கொள்ள நிச்சயம் உதவும். இன்னும் செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயற்கை வேளாண் முறைக்கு மட்டுமே வழிவகை செய்தால், நாட்டுக்கும் நல்லது, இளையரும் வேளாண்மைக் கல்விக்கு மரியாதை செய்து (போட்டித் தேர்வுக்காக மட்டும் வேளாண் கல்வியைப் பயன்படுத்தாமல்) உண்மையான வேளாண் புரட்சிக்கு வழிகோலுவார்கள்.

Tuesday 11 January 2011

சென்னை!

சென்னை! 2002 ல் சென்னைக்கு வேலை கிடைத்து வந்த புதிதில் நன்றாய்த் தான் இருந்தது! அக்கா வீட்டில் இருந்து எல்லா வகை போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி (வீட்டிலிருந்து மிதிவண்டியில் ரயில் நிலையம், ரயிலில் இருந்து இறங்கி பேருந்து பிடித்து அலுவலகத்தின் சற்று அ ருகில் இருந்த நிறுத்ததில் இறங்கி 15 நிமிட நடை) பல மாதங்கள் வந்த போது, கொஞ்ச கொஞ்சமாய் முதல் மாதத்தில் இருந்த உற்சாகம் படிப்படியாய் குறைந்த்து. ஆனால் இங்குள்ள அனைவருக்கும் அனேகமாக இந்த நிலை தான் என்று அறிந்த போது என்னையும் இணைத்துக் கொண்டேன்.

பிறகு, அலுவலகத்தின் அருகிலேயெ ஒரு நல்ல ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்ற போது சென்னை நல்ல ஊருதாம்ப்பா என்று தோன்றியது!


வாடகை வீடு!

அம்மா அப்பா ஓய்வுக்குப் பிறகு, அவர்களுடன் வேளச்சேரியில் ஒரு வீட்டில் இருந்தேன். அம்மாவின் அருமையான சாப்பாடு, இன்னும் தெம்பாக்கியது! அப்போது, சொன்னால் நம்ப மாட்டீங்க, ரூ.1700 தான் நல்ல இடவசதியுடன், ஓரறை வீடு! அப்போது தான் வந்தாங்கப்பா நம்ம software மக்கள், ஊக வணிகம்.. போன்ற மற்றும் பல காரணிகள்! காய்கறியில் இருந்து வீட்டு வாடகை வரை ராக்கெட் வேகத்தில் பறந்தது! ஒரு வருடத்தில் பலமுறை வாடகை ஏற்றுவது பற்றித் தான் வீட்டுச் சொந்தக்காரர் அதிகம் பேசினார். வாடகை ரூ.3500 ஆனது. (இப்போது நிச்சயம் ரூ. 10000 ஐ தொட்டிருக்கும்). அப்போதெ வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம், லோன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்ற வேட்கை அதிகம் ஆனது. (வாடகைத் தொகைக்குப் பதிலாக லோன் அடைத்து வந்தால்,... அதில் உள்ள பிரச்சினைகள் பிறகு!)

திருமணம், குழந்தை..

இடையில் இனிதே திருமணம். திருமணத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்ததால், வேலைக்கும், சென்னைக்கும் ஒரு bye! தற்காலிகமாக!! பிறகு குழந்தைக்காக மதுரையில் பல மாதங்கள். பிறகு கதார் நாட்டில் 8 மாதங்கள், அன்புக்கு(அன்பு மகன்! ), நான்கு மாதங்களே ஆனதாலும், அங்கு பேருந்து போக்குவரத்து அதிகம் இல்லாததாலும், எங்கு செல்லவும் யாரையாவது எதிர்ப்பார்க்க வேண்டியிருந்ததாலும் (கணவரும் காலை 5 மணிக்கு கிளம்பியவர் மாலை 7 மணிக்குத்தான் வர முடியும்) தோஹா பிடிக்கவில்லை! ஆரம்பத்தில் நம் நாட்டவர் யாருமில்லை. பக்கத்து வீட்டு சீனக்குடும்பத்தினரையும் அவ்வப்போது பார்த்து சிரித்து hi, hello மட்டும் தான்! நல்ல வேளையாக ஒரு தமிழ் நாட்டு புதுமண தம்பதி எதிர் வீட்டில் வந்ததால் பெரிய ஆறுதல் பெண்கள் இருவருக்கும்!

மீண்டும் சென்னை..

மடிப்பாக்கத்தில் இருமுறை வீடு மாற்றம்... மீண்டும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம். திரும்பவும் சென்னை. மற்ற நாடுகளில் இருக்கும் போதாவது ஒரு சில இந்திய குடும்பங்கள் மட்டுமே இருந்தாலும், நல்ல நட்புடன் இருக்க முடிந்தது. சென்னையில் பழைய நண்பர்கள் தொலைவில், அக்கம் பக்கத்தார் புன்னகைக்க கூட முடியாத நிலையில் 'gated community' யாக இருப்பதால் வெறுமையாகவே இருக்கிறது, அதுவும், என் போன்ற வேலைக்குச் செல்ல இயலாத பெண்களுக்கும், விளையாட ஆள் இல்லாத குழந்தைகளுக்கும்!. விலைவாசியுடன், வாடகையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்னால் 40 லட்சங்களில் இருந்த 1 கிரவுண்ட் இப்போது 60, 70 களில்...(உங்களுக்குப் புரிந்திருக்கும் சென்னையின் புறப்பகுதிகளில் தான்!). சென்னையில் வீடு இன்னும் எட்டாக் கனியாகவே! இப்போதைக்கு நிலம் மட்டும் வாங்கலாம் என்றால் அதற்கு பணமும், காலமும் இல்லை.இப்போது நான்காவது முறையாக சென்னைக்கும், அயல் நாடுகளுக்கும் ஊசலாட்டம்! திரும்பவும் சென்னைக்கு ஒரு bye!

இது எல்லாம் பல சுகங்களை தியாகம் செய்து, போராடி, ஒரளவு சம்பாரித்து சிக்கனமாக வாழ நினைத்து இருக்கும் எங்களைப் போன்ற நடுத்தர மக்களின் நிலை. தினமும் போராடி வாழும் மக்களை நினைத்தால் கவலையும், ஆச்சரியமும் ஒருங்கே எழுவதோடு, நிலையை உயர்த்த ஒன்றும் செய்ய இயலாத நமது கையாலாகாத தனத்தால் வெட்கமும் ஏற்படுகிறது!

கோவா

கோவா,கடற்கரைகளால் அழகு படுத்தப்பட்ட அழகிய மாநிலம். ஆரவாரமான கடற்கரைகளும் அமைதியான இயற்கையழகும் நிறைந்து மனதிற்கு புத்துணர்வூட்டுகிறது! போர்த்துகீசியர்களின் நினைவூட்டும் பழமையும், புதுமையும் நிறைந்த நகரம். இப்போது, அயல் நாட்டவரில் பெரும்பாலும் ரஷ்ய நாட்டு மக்களின் வருகை அதிகமாம். அதனால், உள்ளூர் மக்களும், விளம்பர பலகைகளும் ரஷ்ய மொழி பேசுகின்றன(ர்)

சமீபத்தில் கோவாவிற்கு சென்ற போது, புத்தாண்டு கொண்டாட்டங்களில் மாட்டிக் கொண்டோம்!கோவா, அயல் நாட்டினருக்கு சொர்க்கபுரி என்று சொல்கிறார்கள். ஆனால் நமது இளைஞர் பட்டாளத்தினருக்கோ சொர்க்கத்தை மட்டும் மலிவு விலையில் (சொர்க்கம்=மது) அள்ளித்தரும் ஊராகவே இருக்கிறது. இயற்கை அழகை அள்ளிப் பருகி, உள்ளமும் உடலும் உறுதி பெறுவதற்காக வெளி நாட்டினர் அமைதியான கடற்கரையோரங்களை நாடும் போது, நமது மக்கள், போதையிலும், ஆட்டங்களிலும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ‘குடி’மக்களைக் காக்க அரசு எவ்வளவோ டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு அடியிலும் வைத்த போதும், கோவா அரசுக்கே லாபம்!! இதற்கு ஒரு தடை சட்டம் போடலாம், தமிழக அரசு (மேலிடத்தைச் சந்தித்து)!!

இயற்கை அழகு கொஞ்சும் கோவாவில், வழக்கம் போல சுற்றுலாக் கழகம் ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒழுங்கு முறையும் கிடையாது! எங்கும் வசதியின்மை. எந்த பொருளை எடுத்தாலும் MRP யை போல் இருமடங்கு விலை. அப்படியிருந்தாலும் நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதில்லை!! ஒரு பார்லே ஜி சின்ன பாக்கெட் மட்டும் தான் கிடைத்தது எங்கள் மகன் சாப்பிட கேட்டு அழுத போது, 5 ரூபாய் பாக்கெட் 10 ரூபாய்க்கு, அதுவும் வட கோவா பகுதியில், முக்கிய சுற்றுலா தளமான டால்பின் பாய்ண்ட்டில்!

தங்கிய இடம் முதல் போக்குவரத்து வசதி வரை ரொம்ப மோசமான அனுபவமே கிடைத்தது, ஆனாலும் இன்னும் ஒரு முறை சீசன் இல்லாத போது, நல்ல வானிலையில் சென்று இயற்கை அழகைப் பருக ஆசை!!