Pages

Saturday 17 September 2011

பெண்...

There will never be a generation of great men until there has been a generation of free women -- of free mothers - Robert G. Ingersoll
பெண்கள் குறித்து பல பழமொழிகளும், சொற்றொடர்களும் இருந்தாலும், இந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


ஆண்-பெண் சமத்துவம் என்பது வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்பது என் கருத்து. பெண்களுக்கு 30 சதவீதம்..40, 50 என்று அறைகூவும் மனிதர்களும் தன் சொந்த வீட்டில் வசதியாக மறப்பது எப்படியென்று தான் தெரியவில்லை.

என் தோழிகள் பலரும் வீட்டில் ஒரு முகமும் வெளியில் ஒரு முகமும் கொண்டு அவதிப் படுவது கொடுமை. பட்டாம்பூச்சியாக சுற்றிவரும் பெண்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் கூட்டுப்புழுவாய் மாறும் அதிசயம்!..சிலருக்கு திருமணத்திற்குப் பிறகு நல்ல சுதந்திரமோ, இன்னும் மோசமான நிலைக்கோ தள்ளப் படுகின்றனர்.

பெண்கள் படித்தால் முன்னேறி விடுவர் என்பதில் உண்மை உண்டெனினும், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் பார்க்கும் பெரும்பாலோர் வாழும் இந்தியா போன்ற நாடுகளில் குடும்பம் என்ற அடிமைத்தளையில் இருந்து வெளிவந்து கல்வி அறிவைப் பெறவும் பல தடைகள் உள்ளன. அப்படியே தடைதாண்டி வந்தாலும், சுயசிந்தனையை வளர்க்கும் அளவுக்கு நமது கல்வித்தரமும் இருக்கவில்லை. 

இப்போது ஆங்காங்கே சாதனைப் பெண்களைப் பார்த்தாலும், அவர்களும், ஏதாவது ஒரு இடத்திலேனும் பெண் என்பதற்காக பரிகாசத்தையோ, ஏளனத்தையோ கடந்து வர நேர்கிறது.

அனுபவ ரீதியாகக் கூட சொல்ல இயலும். அலுவல் காரணமாக கிராமங்களில் மக்களை சந்திக்கும் போது, ஆண்களே முன்னின்று அதிகாரத் தொனியில் ஆளுவது கண்கூடு. (அதுவும், ஆண் அலுவலர்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம், பெண் அலுவலர்க்கு உடனடியாக கிடைப்பதில்லை). குறிப்பிட்ட தொகுதியில், உள்ளூர் மன்ற உறுப்பினர் (councillor) பெண்ணாக இருக்கவேண்டிய கட்டாயத்தால் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பெண் உறுப்பினரை சமையல் அறையில்தான் பார்க்க முடியும், திருவாளர். கவுன்சிலர் தான் அதிகாரப் பொறுப்பு. கோப்புகளில் கையெழுத்துப் போடுவதும் அவரே. (!!)

பொதுவாக,  விவசாயம், கடல்சார் தொழில்கள், அவை சார்ந்த உபதொழில்களிலும் பெண்களின் பங்கீடு அதிகம் என்பது உண்மை. அதுவும் பருவ நிலை தவறும் போதும், அறுவடைக்கும் மறு உற்பத்திக்கும் இடைப்பட்ட காலங்களிலும், (குறிப்பாக உழவுத்தொழிலாளர்) வருமானத்திற்கு பாடுபடுவது பெண்களே.

பராமரிப்பிலும், வேலையிலும் பாரபட்சம், பாலியல் தொந்தரவுகள், ... இவைகளைத் தாண்டி வெற்றிபெற, முதல் ஆதரவு குடும்பத்தில் இருந்து தொடங்கட்டும்... ஆண்-பெண் சமத்துவம் என்ற போராட்டம் ஒழியும்...

குழந்தை வளர்ப்போடு குடும்பநலனுக்காக பாடுபடும் பெண்களை மதித்து, பொறுப்புக்களைப் பகிர்ந்து சக மனிதனாக உணர்ந்தால் நல்ல சமுதாயம் காண்பது உறுதி.

2 comments:

thendralsaravanan said...

அருமையான கட்டுரை!ஆண்கள் மட்டுமல்ல பெண்களே உணர வேண்டியது அவசியமாகிறது!

murugeswari ravi said...

அருமை .. தென்றல் கூறியு போல் நாம் இங்கு யாருக்கும் இளைப்பில்லை என்பதை உணர்ந்து வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

Post a Comment