Pages

Thursday 31 March 2011

தேவையா?- கிரிக்கெட் அமர்க்களம்!

எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பேச்சு, சாப்பிடும் போதும், தூங்கும் போதும், போகும் போதும், வரும் போதும், பேசும் போதும், எண்ணும் போதும், நடக்கும் போதும், நிற்கும் போதும்.... இன்னும் என்னென்ன பண்ணும் போதும் கிரிக்கெட் தான்... வீட்டில் அடைந்து கொண்டும், அலுவலகத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பியதை உற்றுப் பார்த்துக் கொண்டும், தெருவில் கடைகளில் எட்டிப் பார்த்துக் கொண்டும் எத்தனை சந்தோச முகங்கள்... தி. நகரில் சாவகாசமாக பொருட்கள் வாங்க சரியான வாய்ப்பு!!


தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொள்ளும் ஹாக்கியைப் பற்றி யாருக்காவது தெரியுமா? உலக அரங்கில் சில, பல பதக்கங்களை கொடுத்த விளையாட்டுக்களுக்கு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் உண்டா? அந்த விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் தொடர்ந்து செய்து வருகிறதா, அரசு?


குடியரசு தலைவர், பிரதமர் உட்பட்ட தலைமைப் பட்டாளங்கள், நடிப்புலக நாயகர்கள், இந்தியர்(?) (தமிழக மீனவர்/இந்திய தமிழர்!!) பலரைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரனை அருகில் அமர்த்திக் கொண்டு கைத் தட்டி மகிழ்ச்சியில் திளைத்தக் காட்சி அருமையிலும் அருமை!!


மக்கள் வரிப் பணத்தில் கோடி கோடியாய் பணம் அள்ளிக் கொடுக்கின்றன, அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும். சூதாட்டத்திலும், விளம்பரத்திலும் சம்பாரித்த பணமே, தலைமுறைக்கும் தாங்கும், மட்டைப் பந்து நாயகர்களுக்கு...


இத்தகைய ஆர்வமும், சுறுசுறுப்பும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நல்ல விடயங்களுக்கும் பயன்ப்/ஏற்பட்டால் நல்லது.

Tuesday 22 March 2011

தமிழை வளர்ப்போம்!

சென்ற ஞாயிறு அன்று, தந்தையின் நண்பரைக் காணச் சென்ற பொழுது, ஓர் இனிதான கவி/கருத்தரங்கத்தையும் அனுபவிக்க முடிந்தது. அருமையான தமிழ்க் கவிதைகள்/கருத்துக்கள். முப்பதிற்கும் மேற்பட்டோர் வந்த தமிழ் மன்றக் கூட்டமது. தமிழுக்காக பேசுவது பெரியோரின் வேலை, என்றில்லாமல் ஆறேழு இளைஞரின் பங்கேற்பையும் காண முடிந்தது நல்ல விடயம்.


எங்களது மகனையும் கூட்டிச் சென்றோம்.. இந்த வார்த்தை என்ன? அந்த வார்த்தை என்ன என்று அவன் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் தெரிவித்துக் (பேருந்துக்கு பஸ், வினாவிற்கு கேள்வி/question... நம் நிலைமை இது தான்) கொண்டிருந்தோம். கவிதைக்கு, உனது rhymes, ஆத்திச்சூடி போல என்றதும், புரிந்துக் கொண்டான். நானும், ‘நீ போய் கவிதை சொல்றயா’ என்றதும், ‘கடைசியில் சொல்றேன்’ என்று விளையாட ஓடி விட்டான்.


இரண்டு மணி நேரத்தில் முடிந்த பொழுது, அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி விடை பெற்றுக் கொண்டிருந்தனர், பெரியோர். மகனோ, ‘அம்மா, நானும் போய் சொல்லிட்டு வந்துடுறேன்’ என்று தானாக முன்னே சென்று, சத்தமாக சொல்ல ஆரம்பித்தான். ஆனால், கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லாததால், யாரும் கவனிக்கவில்லை. நான் சென்று, இவனும் கவிதையென, ‘ஆத்திச்சூடி’ சொல்ல இருப்பதைக் கூறியதும், அனைவருக்கும் மகிழ்ச்சி! சிறு மேடையில் (table) தூக்கி நிற்க வைத்ததும், தடங்கலின்றி சொல்லி முடித்தான். தனது பொன்னாடையை (துண்டு) அவனுக்கு வழங்கியும், சிறு பரிசுகளை அளித்தும் மகிழ்ந்தனர், பெரியோர். சிறுவயது முதலே இது போன்ற வாய்ப்புக்களை வழங்குங்கள் என்ற அறிவுரையுடன் விடை பெற்றோம்.


ஆனாலும், தமிழ் பேசினாலே மதிக்காத மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ் வளரும்! இனிய தமிழையும் அறிவோம், மகிழ்வோம்!!

அன்பின் குரலில் ஆத்திச்சூடி!


Friday 18 March 2011

உடல் நலம்

நண்பர்களுக்கு!
இரத்தம் ஏற்றப்பட்டால் மரணமே கதி!!

இந்தப் பதிவைப் படித்துப் பயன் பெறுங்கள்! உண்மை அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது! பதிவருக்கு நன்றிகள் பல

Monday 14 March 2011

ஜப்பான்!

ஜப்பான்-என்னைப் போல் பலருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் இந்நாட்டைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன், முக்கியமாக மக்களின் சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, மரியாதை, தொழில் நுட்ப அறிவு ஆகிய பல காரணங்களுக்காக...


ஜப்பான், ஆறாயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ‘உதிக்கும் சூரிய நாடு’. உலகின் மூத்த குடிமக்களைக் கொண்ட, மிகக் குறைந்த ‘குழந்தை இறப்பு விகிதம்’ உடைய, கொலை பாதககங்கள் (சிங்கப்பூருக்கு அடுத்து) அற்ற நாடாக திகழும் ஜப்பான், இயற்கையின் சீற்றத்தால் அவ்வப்போது நிலைகுலைந்து போவது வழக்கம்.வீடுகளையும் அனைத்துக் கட்டடங்களையும் அதற்கேற்ப சரியான முறையில் வடிவமைத்து தற்காத்து வந்தனர்.



இரண்டாம் உலகப்போரின் போது உலகின் ‘நாட்டாமை’ என்று நினைக்கும் அமெரிக்கா குட்டிப் பையன்(Little boy in Hiroshima), குண்டு மனிதன் (Fat man in Nagasaki) என்ற இரண்டு அணு ஆயுதங்களை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஜப்பானியரைக் கொன்று குவித்தது. அந்த வீழ்ச்சியில் இருந்தும் மீண்டு வாழ்ந்து காட்டினர்.


ஆனால், இந்தமுறை இயற்கை மீண்டும் கொடுமைப் படுத்துகிறது. நினைத்தும் பார்க்க முடியாத இயற்கையின் கொடுர விளையாட்டு. கூடுதலாக அவர்கள் நிர்மாணித்த அணு உலைகளின் விபரீத விளைவுகள்... இவை நிச்சயம் அனைத்து நாடுகளுக்கும் அனுபவ எடுத்துக்காட்டு.


அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்ட நாட்டிற்கே இந்நிலைமை எனில், 20 அணு உலைகள் உள்ள இந்தியா என்ன செய்யப் போகிறது?


போட்டித் தேர்வர்களுக்கு!

இப்போது போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் வேலை தேடும் பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே! அவர்களுக்கு ஒரு சிறு உதவி...

பயனுள்ள வலைத்தளங்கள்!
http://www.jeywin.com/

http://www.onestopias.com/

http://www.saidaiduraisamymanidhaneyam.com/

http://www.radianiasacademy.org/

http://www.indiafirstfoundation.org/