சென்ற ஞாயிறு அன்று, தந்தையின் நண்பரைக் காணச் சென்ற பொழுது, ஓர் இனிதான கவி/கருத்தரங்கத்தையும் அனுபவிக்க முடிந்தது. அருமையான தமிழ்க் கவிதைகள்/கருத்துக்கள். முப்பதிற்கும் மேற்பட்டோர் வந்த தமிழ் மன்றக் கூட்டமது. தமிழுக்காக பேசுவது பெரியோரின் வேலை, என்றில்லாமல் ஆறேழு இளைஞரின் பங்கேற்பையும் காண முடிந்தது நல்ல விடயம்.
எங்களது மகனையும் கூட்டிச் சென்றோம்.. இந்த வார்த்தை என்ன? அந்த வார்த்தை என்ன என்று அவன் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் தெரிவித்துக் (பேருந்துக்கு பஸ், வினாவிற்கு கேள்வி/question... நம் நிலைமை இது தான்) கொண்டிருந்தோம். கவிதைக்கு, உனது rhymes, ஆத்திச்சூடி போல என்றதும், புரிந்துக் கொண்டான். நானும், ‘நீ போய் கவிதை சொல்றயா’ என்றதும், ‘கடைசியில் சொல்றேன்’ என்று விளையாட ஓடி விட்டான்.
இரண்டு மணி நேரத்தில் முடிந்த பொழுது, அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி விடை பெற்றுக் கொண்டிருந்தனர், பெரியோர். மகனோ, ‘அம்மா, நானும் போய் சொல்லிட்டு வந்துடுறேன்’ என்று தானாக முன்னே சென்று, சத்தமாக சொல்ல ஆரம்பித்தான். ஆனால், கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லாததால், யாரும் கவனிக்கவில்லை. நான் சென்று, இவனும் கவிதையென, ‘ஆத்திச்சூடி’ சொல்ல இருப்பதைக் கூறியதும், அனைவருக்கும் மகிழ்ச்சி! சிறு மேடையில் (table) தூக்கி நிற்க வைத்ததும், தடங்கலின்றி சொல்லி முடித்தான். தனது பொன்னாடையை (துண்டு) அவனுக்கு வழங்கியும், சிறு பரிசுகளை அளித்தும் மகிழ்ந்தனர், பெரியோர். சிறுவயது முதலே இது போன்ற வாய்ப்புக்களை வழங்குங்கள் என்ற அறிவுரையுடன் விடை பெற்றோம்.
ஆனாலும், தமிழ் பேசினாலே மதிக்காத மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ் வளரும்! இனிய தமிழையும் அறிவோம், மகிழ்வோம்!!
அன்பின் குரலில் ஆத்திச்சூடி!
No comments:
Post a Comment