Pages

Tuesday, 31 May 2011

Owl -ஆந்தை எப்படி இருக்கு?!


(OWL னு நான் எழுதியதால், அன்பும் அவன் எழுத்தில் பறக்குற owl னு எழுதியிருக்கானாம்!)

animals க்கு ஏன் வால் இருக்கும்மா?



(ஐயோ, வாலை காணாமே!!)



எப்போதும் தூங்க போகும் முன் அவன் கேட்கும் கேள்விகளில் பதில் கூறி எனது தூக்கம் தொலைவதும் உண்டு...

பெரும்பாலும் பூமியைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியே அதிகமாக இருக்கும்...

நாம் பூமிக்குள்ள இருக்கோமா? வெளியிலேயா?

(வெளியில் தாம்மா...)

வெளியில இருந்தா சுத்தும் போது விழ மாட்டோமா? (பூமி சூரியனைச் சுத்தும்னு சொல்லியாச்சுல்ல!)

அப்ப பூமிக்குள்ளே என்ன இருக்கு..?

இப்படியே போகும்....


animals க்கு ஏன் வால் இருக்கும்மா?

எங்க வீட்டு வாலுக்கு, இந்த பெரிய கேள்வி எழுந்தது நேற்று இரவு...

இந்த கேள்விக்கு, நானும், என் அறிவைத் தோண்டி, ஒரு பெரிய விளக்கம் கொடுத்தேன்

வால் இருக்கிறதால தான் மாடு, ஆடு எல்லாம் ஈ, கொசு, பூச்சியெல்லாம் உடம்புல உட்கார்ந்தா விரட்டி விடும், அதுக்கு கை இல்லைல..

நாய்க்குட்டிக்கு, நம்ம பார்த்து பிடிச்சிருந்தா வாலாட்டும், பேச முடியாதுல்ல..

குரங்கு மரத்துல தாவி தாவி ஓடுறதுக்கு...இதுக்கெல்லாம் தான் வால் இருக்குன்னு...

மகனின் பதில்!

சிங்கத்து மேலயுமா பூச்சி பயமில்லாமா உட்காரும்? roar பண்ணி விரட்டிறாதாம்மா? (சிங்கம் மேல் எப்போதும் ஒரு பிரியம் தான், the king of the jungle ன்னு)..


ம்ம்ம்.. எனக்கும் வால் இருந்தா ஜாலியா இருக்கும்மா... பூச்சி வந்தா விரட்டி விடுவேன், பேப்பர் பறக்காம பிடிச்சுக்கிடுவேன்... (அவரு எழுதும் போது என்ன எழுதுவோம்னு கேக்கக் கூடாது, வரையும் போது...)



உங்க வீட்டுக் குட்டிகளுக்கு சொல்ல, நாமும் தெரிந்துக் கொள்ள?

Thursday, 7 April 2011

ஓட்டுப் போடாதே! இப்போதாவது யோசி!

ஓட்டுப் போட்டு என்ன சாதித்து விட்டாய், தோழி/நண்பா? பல திருடரில் ஒரு திருடனைத் தேர்ந்தெடுப்பதில் என்ன பெருமை? உனக்காக குறையொன்றும் தெரியவில்லையெனில், அரசியல்வாதியின் எச்சிலைப் பெற நாயாய் உழைக்கும் கலையுலகு (அதான், தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை உலக மகா நடிகர்கள்)கூறும் கட்சி/வேட்பாளரின் இனிய சாதனைகள்/எதிர்க்கட்சியினரின் மீதான விமர்சனங்களைக் கேள் போதும்! நாறுகிறது தமிழ்நாடே! நம் நலனுக்காகவா, இத்தனை கூட்டங்கள், தொண்டை கிழிய முழக்கங்கள், வெயிலில் வாடி ஓட்டுப் பிச்சைகள்... புல்லரிக்கிறது!!

அப்படியும் போதவில்லையா... இதையாவது படியுங்கள்!

நன்றிகள் பல பதிவருக்கு...

Wednesday, 6 April 2011

அது என்ன மூலியம்?

கேட்க சகிக்கவில்லை இந்த வார்த்தையை... தமிழை எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம், புதிதாக இந்த ஒரு வார்த்தை, மூலம் என்பதற்கு மூலியம் என்று அனைவரும், குறிப்பாக ஊடகத்தில் தான் அதிகம் பேசிக் கேட்க வேண்டி இருக்கிறது.


எவ்வளவோ பொறுத்துட்டோம்... இதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தானா?

ஹாக்கி பற்றிக் கொஞ்சம்!



  • ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.

  • தியான் சந்த் (Dhyan Chand), ஆரம்ப கால இந்திய ஹாக்கி அணித் தலைவராக இருந்து, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தான் தேசிய விளையாட்டு தினமாகும்

  • இந்தியாவில் பிரிட்டிஷாரால் 19ம் நூற்றாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டு பிரபலமாகியது.

  • 1928 முதல் இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது

Thursday, 31 March 2011

தேவையா?- கிரிக்கெட் அமர்க்களம்!

எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பேச்சு, சாப்பிடும் போதும், தூங்கும் போதும், போகும் போதும், வரும் போதும், பேசும் போதும், எண்ணும் போதும், நடக்கும் போதும், நிற்கும் போதும்.... இன்னும் என்னென்ன பண்ணும் போதும் கிரிக்கெட் தான்... வீட்டில் அடைந்து கொண்டும், அலுவலகத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பியதை உற்றுப் பார்த்துக் கொண்டும், தெருவில் கடைகளில் எட்டிப் பார்த்துக் கொண்டும் எத்தனை சந்தோச முகங்கள்... தி. நகரில் சாவகாசமாக பொருட்கள் வாங்க சரியான வாய்ப்பு!!


தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொள்ளும் ஹாக்கியைப் பற்றி யாருக்காவது தெரியுமா? உலக அரங்கில் சில, பல பதக்கங்களை கொடுத்த விளையாட்டுக்களுக்கு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் உண்டா? அந்த விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் தொடர்ந்து செய்து வருகிறதா, அரசு?


குடியரசு தலைவர், பிரதமர் உட்பட்ட தலைமைப் பட்டாளங்கள், நடிப்புலக நாயகர்கள், இந்தியர்(?) (தமிழக மீனவர்/இந்திய தமிழர்!!) பலரைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரனை அருகில் அமர்த்திக் கொண்டு கைத் தட்டி மகிழ்ச்சியில் திளைத்தக் காட்சி அருமையிலும் அருமை!!


மக்கள் வரிப் பணத்தில் கோடி கோடியாய் பணம் அள்ளிக் கொடுக்கின்றன, அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும். சூதாட்டத்திலும், விளம்பரத்திலும் சம்பாரித்த பணமே, தலைமுறைக்கும் தாங்கும், மட்டைப் பந்து நாயகர்களுக்கு...


இத்தகைய ஆர்வமும், சுறுசுறுப்பும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நல்ல விடயங்களுக்கும் பயன்ப்/ஏற்பட்டால் நல்லது.

Tuesday, 22 March 2011

தமிழை வளர்ப்போம்!

சென்ற ஞாயிறு அன்று, தந்தையின் நண்பரைக் காணச் சென்ற பொழுது, ஓர் இனிதான கவி/கருத்தரங்கத்தையும் அனுபவிக்க முடிந்தது. அருமையான தமிழ்க் கவிதைகள்/கருத்துக்கள். முப்பதிற்கும் மேற்பட்டோர் வந்த தமிழ் மன்றக் கூட்டமது. தமிழுக்காக பேசுவது பெரியோரின் வேலை, என்றில்லாமல் ஆறேழு இளைஞரின் பங்கேற்பையும் காண முடிந்தது நல்ல விடயம்.


எங்களது மகனையும் கூட்டிச் சென்றோம்.. இந்த வார்த்தை என்ன? அந்த வார்த்தை என்ன என்று அவன் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் தெரிவித்துக் (பேருந்துக்கு பஸ், வினாவிற்கு கேள்வி/question... நம் நிலைமை இது தான்) கொண்டிருந்தோம். கவிதைக்கு, உனது rhymes, ஆத்திச்சூடி போல என்றதும், புரிந்துக் கொண்டான். நானும், ‘நீ போய் கவிதை சொல்றயா’ என்றதும், ‘கடைசியில் சொல்றேன்’ என்று விளையாட ஓடி விட்டான்.


இரண்டு மணி நேரத்தில் முடிந்த பொழுது, அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி விடை பெற்றுக் கொண்டிருந்தனர், பெரியோர். மகனோ, ‘அம்மா, நானும் போய் சொல்லிட்டு வந்துடுறேன்’ என்று தானாக முன்னே சென்று, சத்தமாக சொல்ல ஆரம்பித்தான். ஆனால், கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லாததால், யாரும் கவனிக்கவில்லை. நான் சென்று, இவனும் கவிதையென, ‘ஆத்திச்சூடி’ சொல்ல இருப்பதைக் கூறியதும், அனைவருக்கும் மகிழ்ச்சி! சிறு மேடையில் (table) தூக்கி நிற்க வைத்ததும், தடங்கலின்றி சொல்லி முடித்தான். தனது பொன்னாடையை (துண்டு) அவனுக்கு வழங்கியும், சிறு பரிசுகளை அளித்தும் மகிழ்ந்தனர், பெரியோர். சிறுவயது முதலே இது போன்ற வாய்ப்புக்களை வழங்குங்கள் என்ற அறிவுரையுடன் விடை பெற்றோம்.


ஆனாலும், தமிழ் பேசினாலே மதிக்காத மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ் வளரும்! இனிய தமிழையும் அறிவோம், மகிழ்வோம்!!

அன்பின் குரலில் ஆத்திச்சூடி!