எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பேச்சு, சாப்பிடும் போதும், தூங்கும் போதும், போகும் போதும், வரும் போதும், பேசும் போதும், எண்ணும் போதும், நடக்கும் போதும், நிற்கும் போதும்.... இன்னும் என்னென்ன பண்ணும் போதும் கிரிக்கெட் தான்... வீட்டில் அடைந்து கொண்டும், அலுவலகத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பியதை உற்றுப் பார்த்துக் கொண்டும், தெருவில் கடைகளில் எட்டிப் பார்த்துக் கொண்டும் எத்தனை சந்தோச முகங்கள்... தி. நகரில் சாவகாசமாக பொருட்கள் வாங்க சரியான வாய்ப்பு!!
தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொள்ளும் ஹாக்கியைப் பற்றி யாருக்காவது தெரியுமா? உலக அரங்கில் சில, பல பதக்கங்களை கொடுத்த விளையாட்டுக்களுக்கு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் உண்டா? அந்த விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் தொடர்ந்து செய்து வருகிறதா, அரசு?
குடியரசு தலைவர், பிரதமர் உட்பட்ட தலைமைப் பட்டாளங்கள், நடிப்புலக நாயகர்கள், இந்தியர்(?) (தமிழக மீனவர்/இந்திய தமிழர்!!) பலரைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரனை அருகில் அமர்த்திக் கொண்டு கைத் தட்டி மகிழ்ச்சியில் திளைத்தக் காட்சி அருமையிலும் அருமை!!
மக்கள் வரிப் பணத்தில் கோடி கோடியாய் பணம் அள்ளிக் கொடுக்கின்றன, அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும். சூதாட்டத்திலும், விளம்பரத்திலும் சம்பாரித்த பணமே, தலைமுறைக்கும் தாங்கும், மட்டைப் பந்து நாயகர்களுக்கு...
இத்தகைய ஆர்வமும், சுறுசுறுப்பும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நல்ல விடயங்களுக்கும் பயன்ப்/ஏற்பட்டால் நல்லது.