அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது, சுவிஸில் வாழும் தமிழ் இளையர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 7 வயது வரை இலங்கையில் வளர்ந்தவர் அவர். எதேச்சையாக அருகில் அமர்ந்த சில நிமிடங்களில், அறிமுகப் படுத்திக்கொண்டோம். என்னிடம் கைபேசி இருந்தால் தருமாறும், தன்னிடம் மலேசிய நாணயங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு உதவுமாறும் கேட்டார்... நான் மறுத்து, கைப்பேசி சேவையில் இல்லை என்றுக் கூறி, பத்து ரூபாயை நீட்டினேன். நன்றியுடன் வாங்கி சென்றவர், இலவச தொலைபேசியில் பேசியதாகக் கூறிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.இலவச சேவையைப் பாராட்டிக் கொண்டார்...(ஆனால், சிறிது நேரம் கழித்து, நான் சென்ற போது மூன்றில் ஒன்று தான் வேலை செய்தது, அதிலும் நீண்ட வரிசை...ம்ம்ம் காசு கொடுத்துப் பேசி நகர்ந்தேன்..!)
முதன்முறையாக, இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் கொள்ள வந்ததாகக் கூறினார். அவர் வாயில இருந்து இந்தியாவைப் பத்தி இம்புட்டுத் தான் பேசினார்... ஒன்னுமில்ல போல சொல்றதுக்கு...
- நான் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை.. (சினிமாவில் தான் இந்தியாவைத் தெரிந்து வைத்திருந்தாராம், என்ன படம் பார்த்தாரோ?!)
- சாப்பாடும் அவ்வளவு பிடிக்கவில்லை..
- ஒரே stress தான், ஒரு வேளை அலைச்சல் காரணமும் சேர்ந்திருக்கலாம்!!.
- pizza வுக்காக அலைந்து திரிந்து, கிடைத்ததும் தின்னச் சகிக்கல. இத்தாலிய cheese வகையில் செய்தால் தான் நல்லா இருக்கும். (இதையே நம்ம மக்கள் எவ்வளவு ஸ்டைலாக,பந்தாவாக சாப்பிடுறாங்கன்னு பார்த்தாரா? கேக்கல...)
ஈழப் பிரச்சினையைப் பற்றிப் பேசிப் பயனில்லையென்று நினைத்தாரோ என்னவோ, தலைமை சரியில்லை என்றால் அப்படித்தான், ஆர்மிக்காரர்களை அப்படியே வளர்த்து விட்டிருக்கிறார்கள், சாராயமும், பணமும் தாராளமாகக் கொடுத்துப் பெண்களைக் கண்டால் பாயும் விலங்குகளாக...அவர்களை ஒன்றும் சொல்லமுடியாது என்று...
சுவிஸில் தமிழர் நிலை குறித்துக் கூறியது..
தமிழர் வாழ்க்கை நல்லாவே இருக்கு...சுதந்திரமாகவும், சமமாகவும் நடத்தப் படுவதாகக் கூறினார்...நல்ல சம்பாத்தியமும் கூட..ஆனால், பிழைக்கப் போன இடத்தில் நல்லா சம்பாரிச்சாலும், புடவை கட்டி கழுத்து மறைய நகையைப் போட்டுக் கொண்டுத் திரிந்தால் இடம் கொடுத்தவன், என்ன நினைப்பான் என்று குறைப்பட்டுக் கொண்டார்.. இங்கே பரவாயில்லை, எளிமையாக ஒரு நகையுடன், பெண்கள் இருக்காங்கன்னு...(அவர், கல்யாண, காதுகுத்து, பூப்பெய்து விழா போஸ்டரைப் பார்க்கலன்னு நினைக்கிறேன், அப்புறம் திருட்டு தொல்லை இல்லைன்னா, நம்ம ஊருல போட்டி போட்டுக்கிட்டு, அள்ளிப் போட்டுட்டு அலைய மாட்டாங்களா?!...)
இப்போதுள்ள தலைமுறையினருக்கு தமிழ் பேசத் தெரிந்தாலும், படிக்கத் தெரிவதில்லை...மேற்கத்திய கலாச்சாரத்தில் நல்லதைத் தவிர எல்லாத்தையும் பின்பற்றுறாங்க..(இங்க அதவிட மோசம்னு சொல்லல...)
தமிழன் எங்கு இருந்தாலும் அடிமையாய் இருப்பதை உணர்வதில்லை எளிதில், என்றே நினைக்கிறேன். சுவிஸில், உண்மைத் தமிழனின் நிலை அறிய படியுங்கள், பகிர்ந்துக் கொள்கிறேன், நன்றியுடன்..